இந்த 4 இளம் வீரர்களும் நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடிப்பர் - ரவி சாஸ்திரி

image courtesy:PTI
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பல இளம் வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இதுவரை 44 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் புள்ளி பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன.
நடப்பு சீசனில் பல இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளனர். இதனால் இந்த சீசன் அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன ரவி சாஸ்திரி 4 இளம் வீரர்களை தேர்வு செய்து அவர்கள் நிச்சயம் வரும் காலங்களில் இந்திய அணியில் இடம் பிடிப்பர் என்று கூறியுள்ளார்.
அதன்படி, இந்த தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா, சென்னையின் 17-வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே மற்றும் ராஜஸ்தான் வீரரான 14-வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி ஆகிய 4 வீரர்கள் நிச்சயம் எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.






