35 பந்துகளில் சதம்.. வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடிக்கு இவைதான் காரணம் - சச்சின் பாராட்டு

குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்தார்.
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.
பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யவன்ஷி சதம் விளாசினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய 14 வயது வீரரான சூர்யவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் சதமடித்த வீரர், அதிவேகமாக சதமடித்த இந்தியர் போன்ற ஏராளமான சாதனைகளை படைத்தார். இதனால் சூர்யவன்ஷி பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
அந்த வரிசையில் இந்திய ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கர், வைபவ் சூர்யவன்ஷியை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "வைபவின் அச்சமற்ற அணுகுமுறை, பேட் வேகம், பந்தின் லென்த்தை விரைவில் அடையாளம் காணும் திறன் மற்றும் பந்திற்கு ஏற்றவாறு சக்தியை மாற்றும் திறமை ஆகியவை அந்த அற்புதமான இன்னிங்சுக்கு பின்னணியில் உள்ளன.
இறுதி முடிவு: 38 பந்துகளில் 101 ரன்கள்.
நன்றாக விளையாடினார்!!" என்று பதிவிட்டுள்ளார்.






