சென்னை அணியின் இந்த நிலைமைக்கு அவர்கள்தான் காரணம் - சுரேஷ் ரெய்னா விளாசல்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்துள்ளது.
சென்னை அணியின் இந்த நிலைமைக்கு அவர்கள்தான் காரணம் - சுரேஷ் ரெய்னா விளாசல்
Published on

சென்னை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர்.

சென்னை அணிக்கு 6-வது தோல்வியாகும். புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி (4 புள்ளி) எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒன்றில் தோற்றாலும் ஏறக்குறைய வெளியேற வேண்டியதுதான். இந்த இக்கட்டான சூழலில் சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 25-ந்தேதி சன்ரைசர்சுடன் மோதுகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த நிலைமைக்கு தலைமை பயிற்சியாளர் மற்றும் நிர்வாகம்தான் காரணம் என்று இந்தியா மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா விளாசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரை மெகா ஏலத்தில் விட்டுவிட்டீர்கள். ஏலத்தில் ஏராளமான இளம் வீரர்கள், திறமையான வீரர்கள் இருந்தனர், பிரியன்ஷ் போன்ற பல வீரர்கள் இருந்தனர். மேலும் சிஎஸ்கே-வின் கைகளில் நிறைய பணமும் இருந்தது.

தலைமை பயிற்சியாளர் உட்பட அணி நிர்வாகம் நல்ல வீரர்களைத் தேடவில்லை. இது சிஎஸ்கே அணியின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம். மற்ற அணிகள் விளையாடுவதைப் பார்க்கும்போது, அவர்கள் மிகவும் அதிரடியாக விளையாடுகிறார்கள். ஐ.பி.எல். வரலாற்றில் இதற்கு முன்பு சிஎஸ்கே இப்படி தடுமாறியதை நான் பார்த்ததில்லை" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com