இனி வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளை இப்படி நடத்தலாம் - கம்மின்ஸ் யோசனை

3-வது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்க உள்ளது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

லார்ட்ஸ்,

டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதல் சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின. இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணி 2-வது இடத்தை பிடித்தது.

இதனையடுத்து 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளன. இந்த இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நாளை இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

முந்தைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகள் இங்கிலாந்தின் சவுத்தாம்டன் (2021), லண்டன் ஓவல் (2023). ஆகிய இடங்களில் நடந்தன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், இனி வரும் காலங்களில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை எந்த அணி வெல்கிறதோ அந்த நாட்டில் அடுத்த இறுதிப்போட்டியை நடத்த வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஒரே மைதானத்தை வைத்திருப்பது மிகவும் எளிதான வழி என்று தோன்றுகிறது. எனவே முந்தைய சாம்பியன்ஷிப் பட்டத்தை எந்த அணி வெல்கிறதோ அந்த நாட்டில் அடுத்த இறுதிப்போட்டியை நடத்தலாம். அல்லது அது போன்ற வேறு ஏதாவது ஒன்றை யோசிக்கலாம். அதே நேரத்தில் மாற்று ஏற்பாடாக ஒவ்வொரு சீசனிலும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தை இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யலாம். அவ்வாறு நடத்தினால் நன்றாக இருக்கும்" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com