இது என்றென்றும் போற்றும் ஒன்று - ஐ.சி.சி. 'ஹால் ஆப் பேம்' -ல் இணைந்தது குறித்து தோனி

image courtesy:PTI
ஐ.சி.சி. 'ஹால் ஆப் பேம்’ பட்டியலில் 11-வது இந்திய வீரராக இணைந்து தோனி சாதனை படைத்துள்ளார்.
மும்பை,
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை ஐ.சி.சி. 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது. அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐ.சி.சி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தோனி அளித்த பங்களிப்பிற்காக அவருக்கு இந்த கவுரவத்தை ஐ.சி.சி. வழங்கியுள்ளது. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி 3 ஐ.சி.சி. வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை (டி20, ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி) வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தவர். அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். அதனால் அவருக்கு இந்த பெருமை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சச்சின், பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே , ராகுல் டிராவிட் உள்ளிட்டோருக்கு பின் இந்த கவுரவத்தை பெற்ற 11வது இந்திய வீரராக எம்.எஸ்.தோனி சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் ஐ.சி.சி. 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைந்தது குறித்து மனம் திறந்துள்ள மகேந்திரசிங் தோனி சில கருத்துகளை கூறியுள்ளார்.
அதில், "ஐசிசி ஹால் ஆப் பேம் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளது பெருமைக்குரியது. இது தலைமுறைகள் மற்றும் உலகம் முழுவதிலும் கிரிக்கெட்டுக்கு பங்காற்றுபவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகும். இதுபோன்ற எல்லா காலத்திலும் சிறந்தவர்களுடன் உங்கள் பெயரையும் நினைவில் கொள்வது ஒரு அற்புதமான உணர்வு. இது நான் என்றென்றும் போற்றும் ஒன்று" என்று கூறினார்.