லக்னோவுக்கு எதிரான வெற்றிக்கு இதுதான் காரணம் - பேட் கம்மின்ஸ் பேட்டி

Image Courtesy: @ipl
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தின் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 65 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஐதராபாத் 18.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 59 ரன் எடுத்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த 2025 ஐபிஎல் தொடர் நாங்கள் நினைத்த மாதிரி செல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால், நிச்சயம் இனிவரும் சீசன்களில் எங்களது அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் 220 ரன்கள் வரை லக்னோ அணி அடிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால், 205 ரன்களில் சுருட்டியதில் மகிழ்ச்சி.
குறிப்பாக இசான் மலிங்கா மிகச் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டை வீழ்த்தியதோடு மட்டுமின்றி அந்த அணியின் ரன் குவிப்பின் வேகத்தையும் கட்டுப்படுத்தினார். இந்த வெற்றிக்கு அவரது பந்துவீச்சும் மிக முக்கிய காரணம். அதேபோன்று அவர் எங்களது அணியின் பயிற்சியாளர்களுடன் இந்த தொடர் முழுவதுமே ஏகப்பட்ட பயிற்சிகளை எடுத்து தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இனியும் அவர் எங்களது அணிக்காக சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன்.
அதேபோன்று எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் தேவையான நேரத்தில் ரிஸ்க் எடுத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை முன்கூட்டியே முடித்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதை போன்று அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்வோம் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






