இந்த வருடம் நான் அசத்துவதற்கு காரணம் இது தான்.. - ரியான் பராக் பேட்டி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
Image Courtesy: Twitter 
Image Courtesy: Twitter 
Published on

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார்

கடந்த 2019 முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் ரியான் பராக் 5 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து சுமாராக செயல்பட்டதால் கடுமையான விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்தார். ஆனால் இந்த வருடம் இதுவரை நடந்த 3 போட்டிகளில் முறையே 43, 84*, 54* என மொத்தம் 181 ரன்கள் அடித்துள்ள அவர் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதனால் விராட் கோலிக்கு நிகராக தற்போது ஆரஞ்சு தொப்பியையும் அவர் அணிந்துள்ளார். இந்நிலையில் பந்தை பார்த்து அடிக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டுள்ள தமக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியது போல் இந்த வருடம் 4-வது இடத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததே இப்படி அசத்துவதற்கு காரணம் என்று ரியான் பராக் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

என்னிடம் எதுவும் மாறவில்லை. சில விஷயங்களை எளிமைப்படுத்தி விட்டேன். இதற்கு முன் நான் சில அம்சங்களை பற்றி அதிகமாக சிந்திப்பேன். இந்த வருடம் பந்தை பார்த்து அடிப்போம் என்பதே என்னுடைய எளிதான இலக்காகும். ஏற்கனவே சொன்னது போல் உள்நாட்டு கிரிக்கெட்டில் சரியாக இந்த இடத்தில் தான் பேட்டிங் செய்வேன். அதே போல ஜோஸ் அவுட்டானதும் இப்போது நான் இந்த இடத்தில் பேட்டிங் செய்கிறேன்.

பொதுவாக இந்த இடத்தில் தான் நான் உள்ளூரில் விளையாடுவேன். கடந்த 3 -4 வருடங்களாக நான் சிறப்பாக செயல்படவில்லை. அப்போதெல்லாம் இது போன்ற சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நான் கடினமான பயிற்சிகளை செய்தேன்.

எனது அப்பா வீட்டில் இருந்து எல்லாவற்றையும் பார்க்க விரும்புவார். அவர் அனைத்தையும் அலசக்கூடியவர். ஆனால் அம்மா இங்கே என்னுடைய ஆட்டத்தை பார்க்கிறார். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com