இந்திய அணி பேட்டிங் செய்தபோது மேக்ஸ்வெல்லிற்கு கடைசி ஓவரை கொடுக்க இதுதான் காரணம்- ஆஸி.கேப்டன் வேட் பேட்டி!

இந்திய அணி பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை வீசிய மேக்ஸ்வெல் அந்த ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கினார்.
image courtesy; ICC
image courtesy; ICC
Published on

கவுகாத்தி,

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 123 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 104 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மேக்ஸ்வெல் ஆட்டத்தின் போக்கை மாற்றி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார்.

முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை வீசிய மேக்ஸ்வெல் அந்த ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கினார். இந்நிலையில் எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே கடைசி ஓவரை வீச மேக்ஸ்வெல்லை அழைத்தேன் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்;-' இதைவிட ஒரு சிறப்பான வெற்றி கிடைக்காது. எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே கடைசி ஓவரை வீச மேக்ஸ்வெல்லை அழைத்தேன். ஆனால் அந்த ஓவரில் 30 ரன்கள் சென்று விட்டன. இருப்பினும் அவரது இந்த 100-வது டி20 போட்டியில் சதம் அடித்து எங்கள் அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் 19 ஓவர்களில் 190 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தபோது கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் 30 ரன்கள் கொடுத்தார். அப்போது கேன் ரிச்சர்ட்சன் அந்த கடைசி ஓவரை வீசி இருக்கலாம் என்று ஓய்வறையில் வருத்தப்பட்டார். இருந்தாலும் மேக்ஸ்வெல் இந்த ஆட்டத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார்' என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com