97 ரன்களில் நின்றபோது திவேட்டியாவிடம் கூறியது இதுதான் - பட்லர் விளக்கம்


97 ரன்களில் நின்றபோது திவேட்டியாவிடம் கூறியது இதுதான் - பட்லர் விளக்கம்
x
தினத்தந்தி 19 April 2025 9:35 PM IST (Updated: 20 April 2025 6:52 PM IST)
t-max-icont-min-icon

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பட்லர் 97 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக அக்சர் படேல் 39 ரன்களும், அசுதோஷ் சர்மா 37 ரன்களும் அடித்தன்ர். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 204 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பட்லர் 97 ரன்களுடனும், திவேட்டியா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பட்லர் ஆட்ட நாயகான தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. பட்லர் 97 ரன்களுடன் மறுமுனையில் இருந்தார். இதனால் திவேட்டியா சிங்கிள் அடித்து ஜாஸ் பட்லர் சதம் அடிக்க உதவுவார் என்று அனைவரும் நினைத்தனர்.

ஆனால் ஸ்டார்க் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட திவேட்டியா சிக்சருக்கு பறக்க விட்டார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால் பட்லர் சதம் அடிக்கும் வாய்ப்பு பறிபோனது.

இந்நிலையில் இது குறித்து பேசிய பட்லர் அளித்த பேட்டியில், "சதத்தை அடிக்க எனக்கு வாய்ப்பு இருந்தாலும் போட்டியை வென்று 2 புள்ளிகளைப் பெறுவது முக்கியம். எனவே நான் ராகுல் திவேட்டியாவிடம் என் ஸ்கோரைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னேன். கடந்த சில வருடங்களாகவே இதனை செய்யும் அவருக்கு நாம் பாராட்டு கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

1 More update

Next Story