டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

இந்தியா மற்றும் இலங்கையில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இத்தொடர் நடைபெற உள்ளது.
சென்னை,
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் கடந்த உலக கோப்பையில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள், 20 ஓவர் தர வரிசையில் உள்ள 3 நாடுகள் ஆகிய 12 அணிகள் நேரடியாக இடம் பெற்றன. மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வானது.
இவை 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் டி20 உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை tickets.cricketworldcup.com தளத்தில் இன்று மாலை 6.15க்கு தொடங்கியது. விற்பனை தொடங்கியவுடன் கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட்டுகளை உடனடியாக மளமளவென புக் செய்து வருகின்றனர்.






