

தர்மசாலா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று நடைபெற்ற 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது.
அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பும்ரா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் பஞ்சாப் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். பஞ்சாப் அணியில் பிரியன்ஷி ஆர்யா 22 ரன்களில் வெளியேறினார். கூப்பர் கனோலி 21 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்சாய் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு முனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தநிலையில், மறுபுறம் சிறப்பாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு பஞ்சாப் அணி 200 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளும், தீபக் சாகர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் ரோகித் சர்மா மற்றும் ரிக்கல்டன் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடியில் ரிக்கல்டன் 48 (23) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய நமன் திர் 9 ரன்களும், சிறிது நேரம் தாக்குப்பிடித்த ரோகித் சர்மா 25 (26) ரன்களும், ரூதர் போர்ட் 20 (21) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய திலக் வர்மா 25 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த வில் ஜாக்சும் அதிரடி காட்ட அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டநிலையில், அபாரமாக ஆடிய இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில் மும்பை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. முடிவில் திலக் வர்மா 75 (33) ரன்களும், வில் ஜாக்ஸ் 25 (10) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஓமர் சாய் 2 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன், சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.