டைம்டு அவுட் விவகாரம்; ஷகிப் அல் ஹசன் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய வங்காளதேச பயிற்சியாளர்!

இலங்கை வீரர் மேத்யூஸ் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டைம்டு அவுட் விவகாரம்; ஷகிப் அல் ஹசன் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய வங்காளதேச பயிற்சியாளர்!
Published on

புது டெல்லி,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 279 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 280 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேசம் அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 282 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இலங்கை வீரர் மேத்யூஸ் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

விதிப்படி ஒரு வீரர் ஆட்டமிழந்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர் கொள்ள வேண்டும். மேத்யூஸ் உடனடியாக மைதானத்துக்கு வந்தாலும் பந்தை எதிர்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. அவரது ஹெல்மெட்டில் பிரச்சினை இருந்ததால் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி மற்ற இலங்கை வீரர்களிடம் கூறினார். இதில் தாமதம் ஏற்பட்டதால் வங்காளதேச கேப்டன் ஷகிப்-அல்-ஹசன், நடுவர்களிடம் அதை சுட்டிக்காட்டி அவுட் கேட்டார். இதையடுத்து மேத்யூசுக்கு 'டைம்டு அவுட்' முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தியுடன் வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் பேட்டிங் செய்தபோது ஷகிப் அவுட் ஆனதும் "நேரமாச்சு கிளம்புங்க" என்ற வகையில் மேத்யூஸ் பதிலடி கொடுத்து பழி தீர்த்தார். அதன் பின் ஆட்டம் முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொள்ளாமல் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த நிகழ்வுகளை பெவிலியனிலிருந்து பார்க்க முடியாமல் களத்திற்குள் சென்று, போதும் நிறுத்துங்கள் என்று தம்முடைய அணியின் கேப்டன் ஷகிப்பிடம் கூறலாம் என நினைத்ததாக வங்காளதேசத்தின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;- "அந்த சமயத்தில் பரவாயில்லை நண்பா சீக்கிரமாக ஹெல்மெட்டை சரி செய்து கொண்டு விளையாடுங்கள் என்று சொல்வதே சரியானதாக இருந்திருக்கும். அந்த நிகழ்வு நடந்தபோது களத்திற்குள் சென்று, போதும் நிறுத்துங்கள் என்று அணியின் கேப்டன் ஷகிப்பிடம் சொல்ல நினைத்தேன். மேலும் ஆட்டம் முடிந்ததும் இலங்கை அணியினர் எங்களுக்கு கை கொடுக்காமல் சென்றனர். அந்த சமயத்தில் நான், முதல் ஆளாக சென்று அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். இவ்வாறு நான் நினைப்பதற்காக என்னை பழைய காலத்து ஆள் என்று இப்போதைய கிரிக்கெட்டர்கள் நினைக்கலாம். ஆனால் கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதே என்னுடைய எண்ணமாகும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com