டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி - கோவை கிங்ஸ் அணியை பந்தாடியது

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சை பந்தாடி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி - கோவை கிங்ஸ் அணியை பந்தாடியது
Published on

நெல்லை,

4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை மற்றும் திண்டுக்கல் நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் நெல்லையில் நேற்றிரவு அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்சுடன் மோதியது. டாஸ் ஜெயித்த கோவை கிங்ஸ் கேப்டன் அபினவ் முகுந்த் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இதையடுத்து கேப்டன் அபினவ் முகுந்தும், ஷாருக்கானும் கோவை அணியின் இன்னிங்சை தொடங்கினர். நிதானமாக ஆடிய இவர்கள் பவர்-பிளேயான முதல் 6 ஓவர் வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஓரளவு நல்ல தொடக்கம் இந்த ஜோடி ஸ்கோர் 45 ரன்களை எட்டிய போது பிரிந்தது. ஷாருக்கான் (22 ரன்), வேகப்பந்து வீச்சாளர் ஹரிஷ்குமாரின் ஓவரில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரங்கராஜன் (2 ரன்), அபினவ் முகுந்த் (22 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் ஹரிஷ்குமார் கபளகரம் செய்ய, கோவை கிங்ஸ் தடம் புரண்டது. தொடர்ந்து 2 சிக்சருடன் 17 ரன் எடுத்த ரஞ்சன் பால் ரன்-அவுட் ஆனார்.

வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் ஒரு பக்கம் ஹரிஷ்குமார் என்றால், இன்னொருபுறம் முருகன் அஸ்வின் சுழலில் மிரட்ட கோவை அணி நெருக்கடிக்குள்ளாகி விக்கெட்டுகள் மளமளவென பறிகொடுத்தது. முந்தைய ஆட்டங்களில் சிக்சர் மழை பொழிந்த அந்தோணி தாஸ் 4 ரன்னில் முருகன் அஸ்வினின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 13 ரன் இடைவெளியில் 6 விக்கெட்டுகளை தாரை வார்த்து கோவை அணி ஊசலாடியது. கடைசி கட்டத்தில் அகில் ஸ்ரீநாத் (18 ரன், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) சற்று தாக்குப்பிடித்து ஒரு வழியாக அணி 100 ரன்களை கடக்க வைத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 115 ரன்களுக்கு முடக்கப்பட்டது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ்குமார் 4 விக்கெட்டுகளும், முருகன் அஸ்வின், பெரியசாமி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தனுடன் வீரர்கள் உற்சாகமாக குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட காட்சி.

பின்னர் சுலப இலக்கை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோபிநாத்தும், கங்கா ஸ்ரீதர் ராஜூவும் களம் புகுந்தனர். கோவை பந்து வீச்சை துவம்சம் செய்த கோபிநாத் பந்தை மைதானத்தின் நாலாபுறமும் தெறிக்கவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். நடராஜனின் ஒரே ஒவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்திய கோபிநாத், விக்னேஷ், அந்தோணிதாசின் ஓவர்களிலும் சிக்சரை பறக்கவிட்டார். 24 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்த கோபிநாத் அதன் பிறகும் அதிரடியில் பரவசப்படுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com