

நத்தம்,
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் லைகா கோவை கிங்ஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற கோவை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பரத் சங்கர், கேப்டன் பாபா இந்த்ரஜித் ஆகியோர் களமிறங்கினர். கோவை கிங்ஸ் அணியின் திறமையான பந்து வீச்சினால் ரன் குவிக்க தவறிய திருச்சி வாரியர்ஸ் அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது. திருச்சி அணியின் சுரேஷ் குமாரை (35 ரன்கள்) தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை கிங்ஸ் அணி தரப்பில் அஜித் ராம், மணிகண்டன் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், ப்ரசாத் ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணியின் சார்பில், அபினவ் முகுந்த் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். அதிரடியில் கலக்கிய ஷாருக்கான் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார். இந்நிலையில் ஷாருக்கான் 67(40) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஆண்டனி தாஸ் 7(9) ரன்களில் வெளியேறினார்.
கடைசியில் அபினவ் முகுந்த் 42(35)ரன்களும், ரவிகுமார் ரோகித் (0) ரன் ஏதும் எடுக்காமலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் கோவை அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 125 ரன்கள் எடுத்தது. திருச்சி அணியின் சார்பில் குமரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றிபெற்றது.