டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணியின் வெற்றி தொடருகிறது

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்சை வீழ்த்தி தொடர்ந்து 6-வது வெற்றியை பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணியின் வெற்றி தொடருகிறது
Published on

நத்தம்,

4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நத்தத்தில் நேற்றிரவு அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-காஞ்சி வீரன்ஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்த காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா, எஸ்.அருண் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

ஸ்கோர் 6.3 ஓவர்களில் 52 ரன்னாக இருந்த போது எஸ்.அருண் (12 ரன்), அபினவ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த கேப்டன் பாபா அபராஜித் (1 ரன்), சஞ்சய் யாதவ் (2 ரன்), பிரான்சிஸ் ரோகின்ஸ் (2 ரன்), ஆர்.சதீஷ் (10 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். நிலைத்து நின்று ஆடிய விஷால் வைத்யா 41 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் அபினவ் பந்து வீச்சில் ஹரிநிஷாந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களம் கண்ட ஹரிஷ் 8 ரன்னிலும், தாமரைகண்ணன் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் காஞ்சி வீரன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் அபினவ் 3 விக்கெட்டும், ஹரி நிஷாந்த் 2 விக்கெட்டும், ஆர்.அஸ்வின், சிலம்பரசன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் என்.ஜெகதீசன் 21 ரன்னிலும், சுமந்த் ஜெயின் 8 ரன்னிலும், கேப்டன் ஆர்.அஸ்வின் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.

அடுத்து ஆர்.விவேக், தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்துடன் இணைந்தார். இருவரும் நேர்த்தியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 18.1 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹரி நிஷாந்த் 44 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 61 ரன்னும், ஆர்.விவேக் 10 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 26 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். காஞ்சி வீரன்ஸ் அணியில் திவாகர் 2 விக்கெட்டும், ஹரிஷ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். திண்டுக்கல் அணி வீரர் ஹரி நிஷாந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

6-வது ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் அணி தொடர்ச்சியாக பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். 6-வது ஆட்டத்தில் ஆடிய காஞ்சி வீரன்ஸ் சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com