

திண்டுக்கல்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தம் மற்றும் நெல்லையில் நடந்து வருகிறது.
இதில் நத்தத்தில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி, காரைக்குடி காளையை எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்த காரைக்குடி கேப்டன் அனிருதா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி 4-வது பந்திலேயே தொடக்க வீரர் முகிலேஷின் (0) விக்கெட்டை பறிகொடுத்தது. இதன் பிறகு விஷால் வைத்யாவும், சஞ்சய் யாதவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சஞ்சய் யாதவ் அவ்வப்போது பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு குதூகலப்படுத்தினார். பவர்-பிளே யான முதல் 6 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது.
அணியின் ஸ்கோர் 76 ரன்களை எட்டிய போது விஷால் வைத்யா (27 ரன்) ஆட்டம் இழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் பாபா அபராஜித் (19 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை.
மறுமுனையில் சதத்தை நெருங்கிய சஞ்சய் யாதவுக்கு கடைசி ஓவரில் 5 ரன் தேவையாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர் மோகன் பிரசாத் வீசிய இறுதி ஓவரின் முதல் பந்தை சஞ்சய் யாதவ் சிக்சருக்கு தூக்க முயற்சித்தார். துரதிர்ஷ்டவசமாக பவுண்டரி அருகே அவர் கேட்ச் ஆகிப்போனார். 5 ரன்னில் இந்த சீசனின் முதலாவது சதத்தை நழுவவிட்ட சஞ்சய் யாதவ் 95 ரன்களில் (60 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு தந்த ஆர்.சதீஷ் 31 ரன்களுடன் (14 பந்து, 5 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் காஞ்சி வீரன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது.
அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய காரைக்குடி அணியில் கேப்டன் அனிருதா டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த வீரர்களும் தாக்குப்பிடிக்க முடியாமல் தகிடுதத்தம் போட்டனர். மிதவேகப்பந்து வீச்சாளர் ஆர்.சதீஷ் ஒரே ஒவரில் 3 விக்கெட்டுகளை காலி செய்ய காரைக்குடி அணி முற்றிலும் சீர்குலைந்தது.
முடிவில் காரைக்குடி அணி 14.4 ஓவர்களில் வெறும் 67 ரன்னில் அடங்கியது. டி.என்.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். அந்த அணியில் சூர்யபிரகாஷ் (12 ரன்), ஷாஜகான் (12 ரன்), ஆதித்யா (10) ஆகியோர் தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இதன் மூலம் காஞ்சி வீரன்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதலாவது வெற்றியை பெற்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலித்த சதீஷ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.