டி.என்.பி.எல். கிரிக்கெட்: 24 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: 24 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி
Published on

சென்னை,

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் 19-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதியது.

இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தி மற்றும் என்.ஜெகதீசன் களமிறங்கினர்.

தொடக்கத்தில் இருந்தே இருவரும் களத்தில் அதிரடி காட்டத் துவங்கினர். கவுசிக் காந்தி 5 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் பறக்கவிட்டு 31 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து பவுல்ட் ஆனார். மறுமுனையில் 27 பந்துகளை சந்தித்த ஜெகதீசன் 3 சிக்சர்களை விளாசி 40 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த சோனு யாதவ் 6 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, சற்று நிலைத்து நின்று ஆடிய சசிதேவ் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதன் பிறகு வந்தவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணியில் சார்பில் முதலாவதாக களமிறங்கிய அருண் 18 ரன்களும், நிஷாந்த் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்ரீநிவாசன் 24 ரன்களும், மோஹித் ஹரிஹரன் 3 ரன்களும், விவேக் 16 ரன்களும், சுவாமிநாதன் (0) ரன் ஏதும் எடுக்காமலும், மணி பாரதி 16 ரன்களும், விக்னேஷ் 5 ரன்களும் எடுத்து வெளியேறினார்.

முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை சூப்பர் கில்லீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com