

சென்னை,
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன்படி 10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை இரண்டு கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், 2-வது கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 18-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது.
இதையொட்டி 8 அணிகளும் சேர்ந்து சாய்சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் தன்வர், டி.நடராஜன் உள்பட 103 வீரர்களை தக்கவைத்து 56 வீரர்களை விடுவித்தது. இந்த நிலையில் டி.என்.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் நாளை பிற்பகல் 2.45 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அரங்கில் நடக்கிறது.
ஏலத்தில் மொத்தம் 783 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஏ பிரிவில் யாரும் இல்லை. பி, சி, டி வீரர்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.