

நெல்லை,
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் நெல்லை சங்கர் நகரில் இன்று தொடங்கிய 16-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷாருக்கான் 59(45) ரன்களும், கேப்டன் முகுந்த் 34(35) ரன்களும், ஆண்டனி தாஸ் 28(21) ரன்களும் எடுத்தனர். இறுதியில் கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
159 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக முருகன் அஸ்வின் 36(30) ரன்கள் எடுத்தார். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கோவை கிங்ஸ் அணியின் சார்பில் மணிகண்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 53 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.