

சிட்னி,
இந்தியா ஏ-ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் ரஹானே 108 ரன்களுடனும், முகமது சிராஜ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய முகமது சிராஜ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 93 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரஹானே 242 பந்துகளில் 18 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வில் புகோவ்ஸ்கி (1 ரன்), ஜோ பர்ன்ஸ் (4 ரன்) ஆகியோரது விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலி செய்து எதிரணிக்கு அதிர்ச்சி தொடக்கம் அளித்தார். அப்போது அந்த அணி 6.3 ஓவர்களில் 5 ரன் எடுத்து இருந்தது. அடுத்து வந்த கேப்டன் டிராவிஸ் ஹெட் (18 ரன்) மார்கஸ் ஹாரிஸ் (35 ரன்), நிக் மேட்டின்சன் (23 ரன்), டிம் பெய்ன் (44 ரன்), ஜேம்ஸ் பேட்டின்சன் (3 ரன்), மைக்கேல் நேசர் (33 ரன்) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
நிலைத்து நின்று ஆடிய 21 வயதான கேமரூன் கிரீன் 146 பந்துகளில் சதத்தை எட்டியதுடன் அணியை சரிவில் இருந்தும் மீட்டார். 20-வது முதல் தர போட்டியில் ஆடிய அவர் அடித்த 5-வது சதம் இதுவாகும். அவர் 24 மற்றும் 78 ரன்னில் இருக்கையில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்து சதத்தை கடந்தார்.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. கேமரூன் கிரீன் 173 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 114 ரன்னும், மார்க் ஸ்டகெட்டி 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய ஏ அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இன்று 3-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. ஆஸ்திரேலிய ஏஅணி 39 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.