நியூசிலாந்து அணியில் இருந்து விலகினார் டிரெண்ட் போல்ட்

வேகப்பந்து வீச்சாளர் போல்ட் தனது சொந்த வேண்டுகோளின் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட்டுடனான (NZC)மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் தனது சொந்த வேண்டுகோளின் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட்டுடனான (NZC)மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

33 வயதான வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த முடிவு அவருக்கு கிடைத்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இறுதியாக அவரது கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டது. இதனால் இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.

"போல்ட் 317 டெஸ்ட் விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 169 விக்கெட்டுகளையும் மற்றும் டி20 போட்டியில் 62 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். சமீப காலமாக நியூசிலாந்து அணியுடன் குறைவான பங்கை கொண்டிருந்தார். போல்ட் விளையாட தயாராக இருக்கும் பட்சத்தில் அணியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.

இது குறித்து டிரெண்ட் போல்ட் கூறியதாவது:-

இது எனக்கு மிகவும் கடினமான முடிவு. இந்த நிலைக்கு வருவதற்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவது ஒரு குழந்தை பருவ கனவாக இருந்தது.

என்னால் முடிந்த அனைத்தையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கடந்த 12 ஆண்டுகளில் பல சாதனைகள் புரிந்தேன். இந்த முடிவு எனது மனைவி கெர்ட் மற்றும் எங்கள் மூன்று மகன்களை பற்றியது. குடும்பம் எப்போதுமே எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்து வருகிறது. அதற்கு முதலிடம் கொடுப்பதிலும், கிரிக்கெட்டுக்குப் பிறகு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதிலும் நான் வசதியாக உணர்கிறேன். இந்த நடவடிக்கையானது நியூசிலாந்து அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் என்று எனக்கு தெரியும்.

எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு இன்னும் பெரிய ஆசை உள்ளது. மேலும் சர்வதேச அளவில் வழங்குவதற்கான திறமை என்னிடம் இருப்பதாக உணர்கிறேன். இருப்பினும், தேசிய ஒப்பந்தம் இல்லாதது எனது தேர்வுக்கான வாய்ப்புகளை பாதிக்கும் என்ற உண்மையை நான் மதிக்கிறேன். மேலும் இந்த அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நேரம் சரியானது என்று நான் உணர்கிறேன். இவ்வாறு போல்ட் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com