கடந்த போட்டியில் விளையாடுவதற்கு முயற்சித்தேன் ஆனால்... - தேஷ்பாண்டே

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
Image Courtesy: X (Twitter)
Image Courtesy: X (Twitter)
Published on

தர்மசாலா,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் தரப்பில் ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 28 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ப்ரம்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் ஜடேஜா 3 விக்கெட், தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் சென்னை வீரர் தேஷ்பாண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது,

இன்றைய வெற்றியால் மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில் இது குறைவான ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியாகும். இந்த போட்டியை நாங்கள் கண்டிப்பாக வென்றாக வேண்டிய நிலையில் இருந்தோம். கடந்த போட்டியில் விளையாடுவதற்கு முயற்சித்தேன். ஆனால் காய்ச்சல் காரணமாக முடியவில்லை. எனவே இப்போட்டியில் என்னுடைய சிறந்த செயல்பாட்டை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இது மிகவும் நெருக்கடியான போட்டி.

உயரமான இடத்தில் உள்ள இந்த மைதானத்தில் பந்து சில வேலையை செய்தது. அதை பயன்படுத்தி விக்கெட் எடுப்பது என்னுடைய வேலையாகும். ஸ்லோவாக இருந்த இந்த பிட்ச்சில் சரியான லென்த்துகளில் பந்தை அடித்தால் பேட்ஸ்மேன்களால் கிடைமட்டமான ஷாட்டுகளை அடிக்க முடியாது என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com