

புதுடெல்லி,
உத்திரபிரேச மாநிலம் நொய்டாவில் உள்ளது அம்ரபாலி கட்டுமான நிறுவனம். இந்த நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நியமிக்கப்பட்டார்.
இதனிடையே அம்ரபாலி நிறுவனம் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மக்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்தது. அதோடு, ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் மின்சாரம் உட்பட பல்வேறு வசதிகள் இன்னும் முழுமையாக செய்யப்படவில்லை. கடுமையான நிதி நெருக்கடியில் அம்ரபாலி நிறுவனம் சிக்கியதையடுத்து, இதன் விளம்பர தூதராக இருந்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விலகினார்.
இந்த நிலையில், பல ஆண்டுகள் ஆகியும் விளம்பர தூதராக செயல்பட்ட தனக்கு வழங்கப்பட வேண்டிய தொகையான ரூ. 150 கோடியை அம்ரபாலி நிறுவனம் வழங்காமல் இழுத்தடிப்பதாக, தோனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார். தோனியின் விளம்பரம் தொடர்பான பணிகளை கையாளும் ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனம், தோனி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்து உள்ளது. ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனம், கே.எல். ராகுல் புவனேஷ் குமார், தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளஸிஸ் ஆகியோரின் விளம்பரம் தொடர்பான பணிகளையும் கையாண்டு வருகிறது.
ஏறத்தாழ 7 ஆண்டுகளாக அம்ரபாலி நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்த தோனி, கடந்த 2016 ஆம் ஆண்டு, அம்ரபாலி நிறுவனத்துடனான தனது தொடர்பை துண்டித்துக் கொண்டார்.