

மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரின் வரலாற்றில் பவர்பிளேவில் உமேஷ் யாதவ் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உமேஷ் யாதவ் கடைசியாக ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி 4 ஆண்டுகள் ஆகிறது. டி20 போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி 3 ஆண்டுகள் ஆகிறது. இதனால் ஐபிஎல் போட்டியிலும் உமேஷ் யாதவுக்கு கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்கவில்லை.
சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி உமேஷ் யாதவ் அசத்தினார். இதே போன்று பெங்களூரு அணிக்கு எதிரான 2வது போட்டியின் முதல் ஓவரிலும் விக்கெட்டை சாய்த்த உமேஷ் யாதவ், இன்றும் பஞ்சாப்க்கு எதிராக முதல் ஓவரிலேயே விக்கெட்டை சாய்த்தார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரின் வரலாற்றில் பவர்பிளேவில் உமேஷ் யாதவ் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த மைல்கல்லை எட்டும் 3வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை உமேஷ் யாதவ் பெறுகிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.