19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட்: 14 வயதான சூர்யவன்ஷி மாபெரும் சாதனை

இந்தியா-இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

நார்த்தம்டான்,

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நார்த்தம்டானில் நேற்று முன்தினம் நடந்தது. மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 269 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷி-ஆயுஷ் மாத்ரே களமிறங்கினர். இதில் ஆயுஷ் மாத்ரே 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வெறும் 20 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார்.

ருத்ரதாண்டவம் ஆடிய அவர் வெறும் 31 பந்துகளில் 9 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் உள்பட 86 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த விஹான் மல்கோத்ரா 46 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் கனிஷ்க் சவுகான் (43 ரன்கள்), ஆம்ப்ரிஷ் (31 ரன்கள்) ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வெறும் 34.3 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் 14 வயதான சூர்யவன்ஷி 9 சிக்சர்கள் விளாசியதன் மூலம் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் மன்தீப் சிங் 8 சிக்சர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அவரை முந்தி சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com