

மவுன்ட் மாங்கானு,
இந்திய ஏ கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) மவுன்ட் மாங்கானுவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. பிரித்வி ஷா (62 ரன்), மயங்க் அகர்வால் (65 ரன்), ஹனுமா விஹாரி (86 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தனர். விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் 79 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருத்தார்.
நேற்று 2-வது ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய பார்த்தீவ் பட்டேல் 94 ரன்னிலும், விஜய் சங்கர் 62 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 47 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 122.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தீபக் சாஹர் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து ஏ அணி தரப்பில் டிக்னெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.