‘வா மச்சி.. வா மச்சி’ களத்தில் தமிழில் பேசிய இந்திய வீரர்கள்


‘வா மச்சி.. வா மச்சி’ களத்தில் தமிழில் பேசிய இந்திய வீரர்கள்
x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 5-வது போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.

ஆமதாபாத்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி (5-வது போட்டி) ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது, 3-வது ஆட்டங்களில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருந்தன. பனிமூட்டத்தால் 4-வது ஆட்டம் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

இந்த கடைசி போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 232 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 201 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இருவரும் களத்தில் தமிழில் பேசினர்.

குறிப்பாக வருண் பந்துவீசும்போது கீப்பிங் செய்த சஞ்சு சாம்சன் தமிழில் பேசி உற்சாகப்படுத்தினார். அது அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

அந்த வகையில் சஞ்சு சாம்சன், வருணை நோக்கி, ‘வா மச்சி.. வா மச்சி.. தூக்கு இவன (விக்கெட்டை குறிப்பிட்டு).. நல்லாதான் போட்ர.. ’ என்று களத்தில் தமிழில் பேசினார். இது இணையத்தில் வைரலானது.

வருண் சக்ரவர்த்தி தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் நன்கு தெரியும். மறுபுறம் சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் தமிழ் தெரிய வாய்ப்புள்ளது. ஏனெனில் கேரளா, தமிழகத்தின் பக்கத்து மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story