லக்னோவுக்கு எதிரான வெற்றி... பெங்களூரு கேப்டன் கூறியது என்ன..?

Image Courtesy: @RCBTweets / @IPL
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஜிதேஷ் சர்மா 85 ரன்கள் எடுத்தார்.
லக்னோ,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 118 ரன்களுடன் களத்தில் இருந்தார். பெங்களூரு தரப்பில் நுவான் துஷாரா, புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜிதேஷ் ஷர்மா 85 ரன்களும்,விராட் கோலி 54 ரன்களும் அடித்தனர். லக்னோ அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பெங்களூரு கேப்டன் ஜிதேஷ் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது, என் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நிகழ்காலத்தில் இருப்பதைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். விராட் கோலி அவுட்டான பின் போட்டியை ஆழமாக எடுத்துச் செல்வதைப் பற்றி நினைத்தேன்.
அப்போது என்னிடம் வந்த என்னுடைய குரு, ஆலோசகர், அண்ணா தினேஷ் கார்த்திக் "உங்களிடம் இருக்கும் திறமைக்கு பொறுமையுடன் விளையாடினால் எந்த சூழ்நிலையில் இருந்தும் போட்டியை வெல்ல முடியும்" என்று சொன்னார். ஆர்.சி.பி போன்ற பெரிய அணியில் நான் அழுத்தத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொள்கிறேன். விராட் கோலி, புவனேஸ்வர் போன்ற வீரர்களுடன் விளையாடுவது உற்சாகமாக இருக்கிறது.
இந்தப் போட்டியில் கிடைத்த வேகத்தை அடுத்தப் போட்டிக்கு எடுத்துச் செல்லவிருக்கும் நாங்கள் தற்சமயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கேப்டன்ஷிப் பொறுப்பை எனக்கு கொடுத்த ரஜத் படிதாருக்கு பாராட்டு செல்ல வேண்டும். ஹேசல்வுட் பிட்டாக இருக்கிறார். எங்களுடைய அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் வலுவான மேட்ச் வின்னர்கள். அதனால் 3 - 4 விக்கெட்டுகளை இழந்தாலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






