பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: உணர்ச்சிபூர்வமாக பதிவிட்ட சுப்மன் கில்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்தது.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

துபாய்,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 33 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ரன்களில் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர்.

இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி தீர்த்தனர். இதனிடையே இந்த வெற்றியை நமது ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார். அத்துடன் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து இந்திய துணை கேப்டன் சுப்மன் கில் தனது எக்ஸ் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

அதில், இன்றைய வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்தியாவின் உணர்வு களத்திலும் வெளியிலும் வாழ்கிறது. ஜெய் ஹிந்த்! என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com