

ராஜ்காட்,
விஜய் ஹசாரே தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மத்திய பிரதேசம்-சண்டிகார் அணிகள் ராஜ்காட்டில் மோதின. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த மத்தியபிரதேசம் 9 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்தது. ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் 151 ரன்கள் (113 பந்து, 8 பவுண்டரி, 10 சிக்சர்) நொறுக்கினார். நடப்பு தொடரில் அவரது 2-வது சதமாகும்.
பின்னர் ஆடிய சண்டிகார் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 326 ரன்கள் சேர்த்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த அணியில் கேப்டன் மனன் வோரா (105 ரன்), அங்கித் கவுசிக் (111 ரன்) ஆகியோர் சதம் அடித்தும் பலன் இல்லை. பேட்டிங்கில் மிரட்டிய வெங்கடேஷ் அய்யர் பந்து வீசி 2 விக்கெட்டும் வீழ்த்தினார். மத்திய பிரதேச அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.
வெங்கடேஷ் அய்யர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினிகாந்தின் பிறந்தநாளான நேற்று அய்யர் சதத்தை எட்டியதும், இந்த சதத்தை ரஜினிக்கு அர்ப்பணிக்கும் வகையில் அவரது ஸ்டைலை களத்தில் செய்து காண்பித்து கவனத்தை ஈர்த்தார்.