மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, கம்பீருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம்

மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, கவுதம் கம்பீர் ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, கம்பீருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம்
Published on

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வீழ்த்தி 5-வது வெற்றியை ருசித்ததுடன் அந்த அணிக்கு எதிரான முந்தைய தோல்விக்கும் பழிதீர்த்தது.

இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்களே எடுத்தது. இந்த சிறிய இலக்கை கூட எடுக்க முடியாமல் லக்னோ அணி 19.5 ஓவர்களில் 108 ரன்னில் சுருண்டு 4-வது தோல்வியை சந்தித்தது. பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (44 ரன்கள்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முன்னதாக லக்னோ அணி பேட்டிங் செய்த போது, பீல்டிங்கில் நின்ற பெங்களூரு நட்சத்திர வீரர் விராட்கோலி மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டார். விக்கெட் வீழ்ந்த போதெல்லாம் ஆவேசமாக கத்திய அவர் அவ்வப்போது ரசிகர்களை நோக்கி ஆதரவு குரல் எழுப்பும்படி சைகை மூலம் கேட்டுக்கொண்டார். 17-வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த லக்னோ வீரர் நவீன் உல்-ஹக், விராட்கோலி குறித்து ஏதோ நடுவரிடம் புகார் தெரிவிக்க இருவருக்கும் இடையே உரசல் ஆரம்பமானது.

இந்த உரசல் போட்டி முடிந்த பிறகும் பிரதிபலித்தது. போட்டி முடிந்ததும் இரு அணியினரும் பரஸ்பரம் கைகுலுக்கும் போது நவீன் உல்-ஹக்கும், விராட்கோலியும் மீண்டும் முறைத்து கொண்டதுடன் இருவரும் கோபமாக ஏதோ கூறிவிட்டு நகர்ந்தனர். அடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ், விராட்கோலியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.. அவரை அந்த அணியின் ஆலோசகரும், இந்திய முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் அழைத்து சென்றார்.

இதனால் சட்டென்று கோபத்தில் விராட்கோலி ஏதோ வார்த்தையை உதிர்க்க, கம்பீரும் பதிலுக்கு திட்டியதுடன் கோலியை நோக்கி அடிப்பது போல் நெருங்கினார். இருவரும் காரசாரமாக விவாதிக்க, மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதைத் தொடர்ந்து அமித் மிஸ்ரா உள்ளிட்ட சக வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி விட்டனர். எனவே சிறிது நேரம் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது. வீரர்களின் சிறுபிள்ளைத்தனமான மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

களத்தில் நடந்த சம்பவத்தை அங்கேயே மறந்து விட்டு நாகரீகமாக கைகுலுக்குவதை விடுத்து வீரர்கள் ஆட்டம் முடிந்த பிறகு மோதல் போக்கை கடைப்பிடித்த சம்பவம் ரசிகர்களை மட்டுமின்றி போட்டி அமைப்பாளர்களையும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி இருக்கிறது.

மூன்று பேரும் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்கள் மீது ஐ.பி.எல். நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. போட்டி விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக விராட்கோலி, கவுதம் கம்பீர் ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதத்தையும், நவீன் உல்-ஹக்குக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தையும் ஐ.பி.எல். நிர்வாகம் அபராதமாக விதித்தது. இதனால் விராட்கோலிக்கு ரூ.1 கோடியும், கம்பீருக்கு சுமார் ரூ.25 லட்சமும் இழப்பு ஏற்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அளவுக்கு அதிகமான ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டதாக விராட்கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com