தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி

தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் இந்திய வீரர் விராட் கோலி அதிக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.
தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி
Published on

புனே,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேயில் நடந்து வரும் 2-வது டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 33 பவுண்டரி, 2 சிக்சருடன் 254 ரன்கள் குவித்து வியப்பூட்டியதுடன், பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார். இது அவரது 7-வது இரட்டை சதமாகும். இதன் மூலம் டெஸ்டில் அதிக இரட்டை சதங்கள் ருசித்த இந்திய வீரர் என்ற மகிமையை பெற்றார். இதற்கு முன்பு ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் ஆகியோருடன் தலா 6 இரட்டை சதத்துடன் சமனில் இருந்தார். அவர்களை கோலி இப்போது பின்னுக்கு தள்ளியுள்ளார்.

* ரன் குவிக்கும் எந்திரம் என்று வர்ணிக்கப்படும் 30 வயதான விராட் கோலி தனது முதலாவது இரட்டை சதத்தை 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அடித்திருந்தார். அதன் பிறகு 3 ஆண்டுகளில் அவரது இரட்டை சத எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து விட்டது. இந்த காலக்கட்டத்தில் மற்ற வீரர்களில் யாரும் 2 இரட்டை சதங்களுக்கு மேல் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

* வெஸ்ட் இண்டீஸ் (200 ரன்), நியூசிலாந்து (211), இங்கிலாந்து (235), வங்காளதேசம் (204), இலங்கை (213 மற்றும் 243), தென்ஆப்பிரிக்கா (254*) ஆகிய அணிகளுக்கு எதிராக கோலி இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். இதே போல் 6 அணிகளுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தவர்கள் என்று பார்த்தால், இலங்கையின் சங்கக்கரா, பாகிஸ்தானின் யூனிஸ்கான் ஆகியோரும் இச்சாதனையை செய்துள்ளனர். டெஸ்ட் விளையாடிய அணிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே கோலிக்கு இரட்டை சதம் இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது.

250 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய கேப்டன்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனை மகுடம் அவரை அலங்கரிக்கிறது. இந்த வகையில் முந்தைய அதிகபட்ச ரன்னும் கோலியின் வசமே (2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 243 ரன்) இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com