

சிட்னி,
தென்னாப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த நிலையில், கேப்டவுனில் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டி நடந்தது.
இதில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட், சொரசொரப்பான மஞ்சள் நிற காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சுமித் மற்றும் வார்னர் ஆகியோர் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இருவரும் இந்த வருட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் டேவிட் வார்னர் தனது செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். அவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுவயதில் இருந்து விரும்பிய ஒரு விளையாட்டில் கறை ஏற்படுத்தி உள்ளேன். ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு: நான் சிட்னி நகருக்கு திரும்பி செல்கிறேன். கிரிக்கெட் விளையாட்டின் பெயரை கெடுக்கும் வகையில் தவறுகள் நடந்து விட்டன என தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அவர், எனது செயலுக்கு நான் பொறுப்பேற்று அதற்காக மன்னிப்பு கோருகிறேன். கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதன் ரசிகர்களுக்கு இந்த செயல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை நான் அறிவேன். நாம் அனைவரும் விரும்பும் மற்றும் சிறுவனாக இருந்தபொழுதில் இருந்து நான் விரும்பிய விளையாட்டில் இது ஒரு கறையாக அமைந்து விட்டது என தெரிவித்துள்ளார்.
எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நம்பிக்கைக்கு உரிய ஆலோசகர்களுடன் நேரம் செலவிட உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
31 வயதான வார்னர் இதுவரை 74 டெஸ்டுகளில் பங்கேற்று 21 சதங்கள் உள்பட 6,363 ரன்களும், 106 ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்கள் உள்பட 4,343 ரன்களும், 70 இருபது ஓவர் ஆட்டங்களில் 1,792 ரன்களும் எடுத்துள்ளார்.