வார்னே மரணம் இயற்கையானது; பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்

வார்னே மரணம் இயற்கையானது என்று பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது.
வார்னே மரணம் இயற்கையானது; பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே, அணிக்காக 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றியதுடன், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கருத்துகளை பதிவிட்டு வந்தார்.

52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் கடந்த 4ந்தேதி பிணமாக கிடந்தார். அசைவின்றி கிடந்த அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க டாக்டர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிகிறது.

வார்னேவின் மரணத்தை அவரது தனிப்பட்ட விஷயங்களை நிர்வகித்து வரும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால் அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஷேன் வார்னேவுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் வார்னேவும் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார். அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வார்னேவின் பிரேத பரிசோதனை தாய்லாந்தில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் பற்றி இன்று விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில், ஷேன் வார்னேவின் மரணம் இயற்கையானது என பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது என்று தாய்லாந்து போலீசார் தெரிவித்து உள்ளனர். இதில், குற்ற செயல் எதுவும் இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கை பற்றி விரிவாக பின்னர் வெளியிடப்படும் என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி தாய்லாந்து நாட்டின் உதவி ஆணையாளர்-ஜெனரல் சுராசத்தே ஹாக்பான் கூறும்போது, வார்னே மரணம் பற்றி பல நாட்களாக புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், எந்தவித குற்ற செயல்களுக்கான அடையாளங்களும் இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் பற்றி வார்னேவின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை அவர்கள் ஏற்று கொண்டனர். அவரது உடலை ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளிடம் அளிப்பதற்கான அனைத்து விசயங்களும் மேற்கொள்ளப்பட்டு விட்டன என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com