

மும்பை.
15வது ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் மோதின . இந்த போட்டியில் சென்னை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி நடப்பு தொடரில் 7-வது தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பு ஏறக்குறைய தகர்ந்து விட்டது. முதல் 8 போட்டிகளில் சென்னை அணியை வழிநடத்திய ஜடேஜா 2 வெற்றிகளை மட்டுமே பெற்று கொடுத்து இருந்தார்.
அதன்பின் கடைசி இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியின் கேப்டனாக தோனி மீண்டும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சென்னை அணியின் மோசமான நிலை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், " சென்னை அணி செய்த முதல் தவறு, சீசனின் தொடக்கத்தில் தோனி கேப்டனாக இருக்க மாட்டார் என்றும், ரவீந்திர ஜடேஜா தான் கேப்டனாக இருப்பார் என்றும் அறிவித்தது தான்.
தொடக்கத்தில் இருந்த சென்னை அணிக்கு நிரந்தரமான பிளெயிங் 11 இல்லை. ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கத்தில் ரன் எடுக்கவில்லை. அவர்கள் மோசமாகத் தொடங்கினார்கள்.
தோனி ஆரம்பத்திலிருந்தே கேப்டனாக இருந்திருந்தால் சென்னை அணி இன்னும் சிறப்பான நிலையில் இருந்திருக்கும். சென்னை அணி பல போட்டிகளில் தோல்வியடைந்திருக்காது " என சேவாக் தெரிவித்தார்.