ஐ.பி.எல். போட்டியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டியில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பால் பாதியில் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வருகிற செப்டம்பர் 19-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை நடக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த தமிழகத்தை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது கவுண்டி லெவன் அணிக்காக களம் இறங்கி பேட்டிங் செய்கையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பந்து வீச்சில் கைவிரலில் காயம் அடைந்தார். எலும்பு முறிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் நாடு திரும்பினார்.

21 வயதான வாஷிங்டனின் காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவர் ஐ.பி.எல். போட்டி தொடரின் எஞ்சிய ஆட்டத்தில் இருந்து விலகி இருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களில் வாஷிங்டன் சுந்தர் விளையாடமாட்டார் என்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது.

வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ்தீப் பெங்களூரு அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அந்த அணியின் வலைப்பயிற்சி பவுலராக இருந்து வருகிறார். இந்த சீசனுக்கான பெங்களூரு அணியில் இருந்து விலகும் 5-வது வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வாஷிங்டன் சுந்தர் உடல் தகுதி சோதனைக்கு ஆஜரானதாகவும், அதில் அவர் தேர்ச்சி பெறாததால் விலகல் முடிவை எடுத்ததாக தெரிகிறது. காயத்தில் இருந்து முழுமையாக விடுபடாததால் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேற இருக்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம் பிடிக்க முடியுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com