'உலகக்கோப்பை தொடர்களில் அரையிறுதி சுற்று நாக் அவுட் முறை அல்லாமல் பிளே ஆப் வடிவமாக மாற்ற வேண்டும்': ஐசிசி-க்கு வாசிம் அக்ரம் கோரிக்கை

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
image courtesy; ICC
image courtesy; ICC
Published on

கராச்சி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.

இந்த ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனாலும் வழக்கம்போல முக்கியமான ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடர்களில் அரையிறுதி சுற்று நாக் அவுட் முறை அல்லாமல் பிளே ஆப் வடிவமாக மாற்ற வேண்டும் என்று ஐசிசி-க்கு வாசிம் அக்ரம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "தற்போது அனைத்து வகையான லீக் தொடர்களிலும் பிளே ஆப் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனெனில் நீங்கள் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிப்பதற்கு மிகவும் கடினமாக உழைத்து வருகிறீர்கள். அங்கே ஒரு மோசமான நாள் காரணமாக நீங்கள் நாக் அவுட்டில் தோற்கக் கூடாது. அப்படி பிளே ஆப் முறை இத்தொடரில் இருந்தால் புள்ளி பட்டியலில் 2-ம் இடம் பிடித்த தென்னாப்பிரிக்காவுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே வருங்காலங்களில் உலகக்கோப்பைகளிலும் நாக் அவுட் முறைக்கு பதிலாக பிளே ஆப் சுற்று கொண்டு வர வேண்டும் " என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com