’ஆல்-ரவுண்ட்’ ஆட்டம் - பாராட்டிய சிவம் துபே... உணர்ச்சிவசப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர்

அர்ஜுன் டெண்டுல்கர், தற்போது மும்பை டி20 லீக்கில் ஆர்க்ஸ் அந்தேரி அணிக்காக விளையாடி வருகிறார்.
’ஆல்-ரவுண்ட்’ ஆட்டம் - பாராட்டிய சிவம் துபே... உணர்ச்சிவசப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர்
Published on

மும்பை,

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர், தற்போது மும்பை டி20 லீக்கில் ஆர்க்ஸ் அந்தேரி அணிக்காக தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

பந்துவீச்சில் கலக்கிய அர்ஜுன்

பந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கர், ஒரு மெய்டன் ஓவர் உட்பட 3 ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் எதிரணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அரைசதம் விளாசிய அதிரடி இன்னிங்ஸ்

145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்க்ஸ் அந்தேரி அணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு விக்கெட் சரிந்தது. தொடக்க வீரர் திவ்யான்ஷ் சக்சேனா 26 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து அர்ஜுன் மற்றும் முஷீர் கான் இணைந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினர். அர்ஜுன் 34 பந்துகளில் 66 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் முஷீர் கான் 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்.

9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அர்ஜுன் - முஷீர் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் ஆர்க்ஸ் அந்தேரி அணி, 37 பந்துகள் மீதமிருந்தபோதே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள், பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் என ஆல்-ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜுன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

சிவம் துபேவின் சிறப்பு பாராட்டு

போட்டி முடிந்த பின்னர் அணியின் டிரஸ்ஸிங் ரூமில் கேப்டன் சிவம் துபே, சிறப்பாக செயல்பட்ட வீரர்களை பாராட்டிப் பேசினார். அப்போது அர்ஜுன் டெண்டுல்கரின் பெயரை குறிப்பிட்டு அவரது ஆட்டத்தை துபே பாராட்டியபோது, அர்ஜுன் உணர்ச்சிவசப்பட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com