உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையுடனும், உறுதியுடனும் இருக்கிறோம்: ஹர்மன்பிரீத்


உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையுடனும், உறுதியுடனும் இருக்கிறோம்: ஹர்மன்பிரீத்
x

தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

பெங்களூரு,

8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் இந்தியாவின் நவி மும்பை, குவாஹாட்டி, இந்தூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களிலும், இலங்கையின் கொழும்புவிலும் நடத்தப்படுகின்றன. உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த ஒரு பேட்டியில், ‘

வரும் உலகக் கோப்பை போட்டிக்கான எங்களது அணியில் அனைத்து துறையிலும் இளமையும், அனுபவமும் வாய்ந்த வீராங்கனைகள் சரியான கலவையில் அங்கம் வகிக்கின்றனர். பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், பிரதிகா ராவல், ரிச்சா கோஷ், உமா சேத்ரி உள்ளிட்ட திறமையான வீராங்கனைகள் உள்ளனர். இதே போல் பந்து வீச்சில் ரேனுகா சிங், அருந்ததி ரெட்டி, இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய வீராங்கனைகள் கிராந்தி கவுட், ஸ்ரீ சரனி, ராதா யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் தீப்தி ஷர்மா, சினே ராணா, அமன்ஜோத் கவுர் ஆகிய ஆல்-ரவுண்டர்களும் இருக்கின்றனர். அவர்களால் ஆட்டத்தின் போக்கை எங்களுக்கு சாதகமாக திருப்ப முடியும்.

இந்திய அணி சரிசமமான கலவையுடன் நல்ல நிலையில் இருக்கிறது. இந்த போட்டி தொடருக்காக அர்ப்பணிப்புடனும், மிகுந்த கவனத்துடனும் தயாராகி இருக்கிறோம். நாங்கள் ஒரு அணியாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கையுடனும், உறுதியுடனும் இருக்கிறோம். மேலும் இந்த உலகக் கோப்பை போட்டிக்கு நேர்மறையான எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் நுழைகிறோம். எப்போதும் போல் இந்த போட்டி தொடர் கடினமாக இருக்கும். ஆனால் எங்களது அணி திறமை மீது முழு நம்பிக்கை வைத்து இருக்கிறது. வரும் எத்தகைய சவாலையும் சமாளிக்க தயாராக உள்ளது. சமீபத்தில் உள்ளூரிலும், வெளிநாட்டிலும் ஆடிய போட்டி முடிவுகள் எங்கள் அணிக்கு நல்ல ஊக்கமளிப்பதாக இருந்தது. உலகக் கோப்பைக்கு வரும் போது நாங்கள் அந்த உத்வேகத்தை அதிகரிக்க ஆர்வமாக உள்ளோம்’ என்றார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. 2005, 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வியை தழுவியது என்பது நினைவுகூரத்தக்கது.

1 More update

Next Story