

ராய்ப்பூர்,
இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா கைப்பற்றியுள்ளது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2-வது போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா 69 ரன்களும், அனுஷ்கா சர்மா 28 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் அளித்தனர்.
அதன்பின் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனை கெலிஸ் ரன் ஏதுமின்றி அவுட் ஆனார். அடுத்து வந்த மோடஸ்டர், 1 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதையடுத்து ஷர்னே மேயர்ஸ்-பிலவட் பிஸா ஜோடி சற்று நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் ஷர்னே மேயர்ஸ் 60 ரன்களும், பிலவட் பிஸா 40 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி தொடர்பாக பேசிய இந்திய பயிற்சியாளர் அமோல் முஜும்தார் கூறியதாவது,
இந்தத் தொடர் எங்கள் அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. தொடரைத் திரும்பிப் பார்க்கும்போது, இதில் பல நேர்மறையான அம்சங்கள் உள்ளன. இந்தத் தொடரிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன. தொடரின் முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்து நாங்கள் பரோடாவுக்குச் செல்கிறோம். இளம் வீராங்கனைகள் அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளனர். முதல் போட்டியிலேயே நிக்கி பிரசாத் தனது திறமையை நிரூபித்தார். அதேபோல், அனுஷ்காவும் முதல் போட்டியிலும் இன்றைய ஆட்டத்திலும் தனது திறமையின் சில சிறப்பான வெளிப்பாடுகளைக் காட்டினார். எனவே, நான் ஏற்கெனவே கூறியதுபோல், இந்தத் தொடரில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. ஹர்மனின் சிறப்பான இன்னிங்ஸையும் நாம் மறந்துவிடக் கூடாது.
எந்த வகையான போட்டியாக இருந்தாலும், அது டி20 ஆக இருந்தாலும் சரி, ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி, ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் எதிரணிக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காத வகையிலும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதையே நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். டிரெஸ்ஸிங் ரூமிலும் அணிக் கூட்டங்களிலும் ஆதிக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறோம். கடந்த 10 அல்லது 12 டி20 போட்டிகளை எடுத்துப் பார்த்தால், களத்தில் எங்களுடைய அணி பல போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியிருப்பதைப் பார்க்க முடியும். எனவே, அணிக் கூட்டங்களிலும் டிரெஸ்ஸிங் ரூமிலும் நாங்கள் விவாதிக்கும் விஷயங்களை வீராங்கனைகள் களத்தில் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள் என்று நினைக்கிறேன். என தெரிவித்தார்.