

சென்னை,
இந்தியாவை 210 முதல் 220 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் விளையாடின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது. இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய சூப்பர் 8 சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
தோல்விக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா, “நாங்கள் இந்தியாவை 210-220 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்திருக்கலாம். பந்து வீச்சும், பீல்டிங்கும் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்,” என்று கூறினார்.
மேலும் அணியின் இளம் வீரர்கள் குறித்து அவர் பேசும்போது, “எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் முதல் உலகக் கோப்பையில் விளையாடுகிறார்கள். இந்தியாவில் முதல் முறையாக விளையாடியது அவர்களுக்கு பெரிய அனுபவம்,” என்றார்.