பாகிஸ்தானின் சீண்டலுக்கு வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்தோம் - திலக் வர்மா பேட்டி

Image Courtesy: @BCCI
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது.
ஐதராபாத்,
துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது. இறுதிப்போட்டியில் 69 ரன்கள் விளாசி ஹீரோவாக ஜொலித்த இந்திய வீரர் 22 வயதான திலக் வர்மா சொந்த ஊரான ஐதராபாத் திரும்பினார். அங்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இறுதி ஆட்டத்தின் தொடக்கத்தில் சுற்று அழுத்தமும், பதற்றமும் இருந்தது. ஆனால் எனது நாட்டை அனைத்தையும் விட முன்னிலையில் வைத்து விளையாடினேன். தேசத்துக்காக வெற்றி பெற வேண்டும் என விரும்பினேன். அந்த நேரத்தில் நான் நெருக்கடிக்குள்ளானால் என்னையும், நமது நாட்டின் 140 கோடி மக்களையும் ஏமாற்றிவிடுவேன் என்பது எனக்கு தெரியும். அதனால் ஷாட் அடிப்பதில் அவசரம் காட்டவில்லை.
இளம் வயதில் பயிற்சியாளர்களிடம் கற்றுக்கொண்ட அடிப்படை விஷயங்களை களத்தில் செயல்படுத்தினேன். அதற்கு பலன் கிடைத்தது. ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர்களின் சீண்டல்களுக்கு எல்லாம் வெற்றியின் மூலம் சரியான பதிலடி கொடுத்தோம். எனது மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று.
இந்த ஆட்டத்தின் போது நிறைய விஷயங்கள் நடந்தன. அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. இந்தியா- பாகிஸ்தான் மோதலின் போது இது போன்று நடப்பது சகஜம். ஆசிய கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி. அடுத்து, சொந்த மண்ணில் அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதே இலக்கு. 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு தான் நிம்மதியாக தூங்குவேன். இவ்வாறு திலக் வர்மா கூறினார்.






