தோனியின் கண்களை பார்க்க கூட பயந்தோம் - பத்ரிநாத் பகிர்ந்த சம்பவம்

தோனி கோபமடைந்த தருணத்தை பத்ரிநாத் பகிர்ந்துள்ளார்.
தோனியின் கண்களை பார்க்க கூட பயந்தோம் - பத்ரிநாத் பகிர்ந்த சம்பவம்
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் 5 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார்.

கேப்டன் தோனி என்றாலே அழுத்தமான சூழ்நிலைகளிலும் பதற்றமடையாமல் பொறுமையாக செயல்படும் தன்மையுடையவர். அதனாலேயே அவரை கேப்டன் கூல் தோனி என்று பலரும் அழைப்பது வழக்கமாகும். ஆனால் தோனியும் அவ்வப்போது பொறுமையிழந்து கோபமடைவது வழக்கமாகும். அது போன்ற தருணத்தை சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் பகிர்ந்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் தொடக்க காலத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டி ஒன்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது சிஎஸ்கே வீரர்கள் சரியாக ஆடாததை எடுத்து தோனி கடுமையான கோபத்துடன் இருந்ததாக சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறி இருக்கிறார்.

இது குறித்து பத்ரிநாத் பேசுகையில், "அவரும் மனிதர் தான். அவரும் சில சமயங்களில் அமைதியை இழப்பார். ஆனால், அது எப்போதும் ஆடுகளத்தில் நடந்தது இல்லை. அவர் எப்போதுமே அமைதி இன்றி இருப்பதை எதிரணிக்கு வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி சென்னையில் நடைபெற்றது. நாங்கள் 110 ரன்களை ஒட்டிய இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்தோம். இடையே நாங்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தோம்.

நான் அனில் கும்ப்ளே பந்து வீச்சில் ஒரு ஷாட் அடிக்க ஆசைப்பட்டு எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகிவிட்டேன். நான் ஓய்வறைக்குள் நின்று கொண்டிருந்தேன். அப்போது தோனி உள்ளே வந்தார். அங்கு ஒரு சிறிய வாட்டர் பாட்டில் இருந்தது. தோனி அதை எட்டி உதைத்தார். அந்த பாட்டில் பறந்து சென்று விழுந்தது. நாங்கள் அவரது கண்ணை பார்க்க கூட பயந்தோம். ஆனால், அவ்வளவுதான். அவர் அதன் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதுதான் தோனி." என்றார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com