ஐசிசி கேட்டாலும் இந்தியாவில் விளையாடமாட்டோம்....வங்காளதேசம் உறுதி

ஐ.சி.சி. போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.
கொல்கத்தா,
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனால் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது. இதையடுத்து, வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது.
எந்தவித காரணமும் இல்லாமல் தங்கள் நாட்டு வீரரை ஐ.பி.எல். அணியில் இருந்து நீக்கியதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த வங்காளதேசம், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியது. அத்துடன் தங்கள் நாட்டில் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது. மேலும், தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதியது.
இதற்கிடையே , வீடியோ கான்பரன்ஸ் மூலம் வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஐ.சி.சி. போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அதன் தலைவர் முகமது அமினுல் இஸ்லாம் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாதுகாப்பு அச்சம் இருப்பதால் உலகக் கோப்பையில் ஆடுவதற்கு இந்தியாவுக்கு செல்வதில்லை என்ற முடிவில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது. எனவே இந்தியாவில் நடக்கும் வங்காளதேச அணிக்குரிய ஆட்டங்களை வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கும்படி ஐ.சி.சி.யை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஆனால், போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் எங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி ஐ.சி.சி. கேட்டாலும், எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. முடிந்த அளவுக்கு பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.






