இன்னும் எங்களால் தொடரை வெல்ல முடியும் - ஸ்டோக்ஸ் நம்பிக்கை

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
image courtesy;AFP
image courtesy;AFP
Published on

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. அந்த நிலையில் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் இங்கிலாந்தை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா தொடரில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த 15-ம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 153 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 224/2 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் அபாரமாக பந்து வீசி அந்த அணியை 319 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 214, கில் 91, சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 557 என்ற மெகா இலக்கை துரத்திய இங்கிலாந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 122 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. அந்தளவுக்கு மிரட்டலாக பந்து வீசி டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் பென் டக்கெட் போல அனைத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் விளையாட முயற்சித்ததாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ஆனால் சில திட்டங்கள் செயல்படாமல் போனதால் தோல்வியை சந்தித்தாக கூறும் அவர் இங்கிலாந்து இப்போதும் அடுத்த 2 போட்டிகளில் வென்று இந்தியாவை 3 - 2 என்ற கணக்கில் வீழ்த்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். -

இது பற்றி அவர் போட்டியின் முடிவில் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு;- "பென் டக்கெட் நம்ப முடியாத இன்னிங்ஸ் விளையாடினார். அதைத்தான் நாங்கள் எங்களுடைய இன்னிங்ஸ் முழுவதும் பின்பற்ற முயற்சித்தோம். அது வேகமாக இந்தியாவின் ஸ்கோரை நெருங்குவதை பொறுத்ததாகும். நாங்கள் நேற்று பந்து வீச விரும்பினோம். ஆனால் அது நாங்கள் நினைத்ததற்கு முன்பாகவே கிடைத்தது.

சில நேரங்களில் உங்களுடைய திட்டங்கள் வேலை செய்யாது. அதுபோல இந்த போட்டியில் நடந்தது. தற்போது 1- 2 என்ற கணக்கில் உள்ள நாங்கள் கம்பேக் கொடுத்து இத்தொடரை வெல்ல எங்களுக்கு மகத்தான வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடரை வெல்வதற்கு அடுத்த இரண்டு போட்டிகளில் வெல்ல வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். அதைத்தான் நாங்கள் செய்ய பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com