நடுவர் மீது விமர்சனம்: வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளருக்கு அபராதம்


நடுவர் மீது விமர்சனம்: வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளருக்கு அபராதம்
x

image courtesy:ICC

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா முதல் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.

துபாய்,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் கடந்த 25-ந் தேதி தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180 ரன்னும், வெஸ்ட்இண்டீஸ் 190 ரன்னும் எடுத்தன. 10 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி தேனீர் இடைவேளையின் போது 81.5 ஓவர்களில் 310 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 301 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் (61 ரன்), வெப்ஸ்டர் (63 ரன்), அலெக்ஸ் கேரி (65 ரன்) அரைசதம் அடித்தனர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 301 ரன் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 33.4 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 141 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 159 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் நடுவர்கள் வழங்கிய சில முடிவுகள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அமைந்தன. இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளானது. இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான டேரன் சமி வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இது ஐ.சி.சி. விதிமுறையை மீறிய செயலாகும்.

இதனால் டேரன் சமி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. டேரன் சமியும் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story