அமிதாப் பச்சன் சினிமாவில் செய்ததை விராட் கோலி கிரிக்கெட்டில்..- சஞ்சய் பங்கர் பாராட்டு


அமிதாப் பச்சன் சினிமாவில் செய்ததை விராட் கோலி கிரிக்கெட்டில்..- சஞ்சய் பங்கர் பாராட்டு
x

எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்கு அசராமல் விராட் கோலி தரமான பதிலடிகளைக் கொடுப்பார்.

மும்பை,

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.

அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 27000+ ரன்களையும் 82 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாபெரும் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோலி இன்றளவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். அதேபோல நிறைய வெளிநாட்டவர்களும் அவரை பின்பற்றுகின்றனர்.

தோனிக்குப்பின் கேப்டன் பதவியை ஏற்ற விராட் கோலி இந்திய அணியை பல வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை அலங்கரிக்க வைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.

பேட்டிங் மட்டுமின்றி களத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்கு அசராமல் விராட் கோலி தரமான பதிலடிகளைக் கொடுப்பார். மேலும் விக்கெட்டுகள் விழுந்தால் அதை அவர் வெறித்தனமாக கொண்டாடுவார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அணுகுமுறைய மாற்றியதில் இவருக்கு பெரும் பங்கு உள்ளது.

இந்நிலையில் 1975 - 1980-களில் சினிமாவில் நடிகர் அமிதாப் பச்சன் செய்ததை விராட் கோலி இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் செய்ததாக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு:- “விராட் கோலி இயற்கையாகவே உங்களுடைய முகத்துக்கு முன் துணிச்சலாக செயல்படக்கூடிய குணத்தைக் கொண்டவர். அதுவே அவருடைய இயற்கையான குணம். ஒருவருடைய இயல்பான குணம் எப்போதும் சரியாகவே உணரப்படுகிறது. அமிதாப் பச்சனின் திரைப்படங்கள் 1975-1980 காலகட்டத்தில் ஏன் வெற்றி பெற்றன? ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் ஒரு கோபமான இளைஞனின் எண்ணம் இருந்தது.

இந்திய சமூகத்தில் கோபம் எங்கோ புகைந்து கொண்டிருந்தது. அது சார்ந்து எடுக்கப்பட்ட அமிதாப் பச்சனின் படங்கள் வெற்றிகரமாக மாறின. அதேபோல் இந்திய கிரிக்கெட்டுக்கு சிறிது ஆக்ரோஷம் தேவைப்பட்டது, ஏனெனில் நமது அற்புதமான நால்வர் (சச்சின், டிராவிட், கங்குலி மற்றும் லக்‌ஷ்மன்) ஓய்வு பெற்றிருந்தனர். மேலும் கோலி கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியிருந்தது, அதை அவர் தனது சொந்த பாணியில் செய்தார். இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறையை அவர் முற்றிலும் மாற்றினார்” என்று கூறினார்.

1 More update

Next Story