ராஜஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன..? சென்னை கேப்டன் கெய்க்வாட் விளக்கம்


ராஜஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன..? சென்னை கேப்டன் கெய்க்வாட் விளக்கம்
x

image courtesy:twitter/@IPL

தினத்தந்தி 31 March 2025 8:25 AM IST (Updated: 31 March 2025 11:38 AM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கவுகாத்தி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அசாம் மாநிலம் கவுகாத்தியில் அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணாவின் அதிரடியின் மூலம் (81 ரன்கள்) 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் அடித்தது. சென்னை தரப்பில் கலீல் அகமது, பதிரானா, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கெய்க்வாட் 63 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்விக்கான காரணம் குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அளித்த பேட்டியில், "பவர்பிளே முக்கிய தருணம். அங்கே நிதிஷ் சிறப்பாக பேட்டிங் செய்தார். 8 - 10 ரன்கள் சுமாரான பீல்டிங் காரணமாக சென்று விட்டது. அதில் முன்னேற வேண்டும். 180 ரன்கள் தொடக்கூடிய இலக்காகும். நீங்கள் சரியாக விளையாடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் 210 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இருந்தனர். கடந்த வருடங்களில் ரகானே, ராயுடு ஆகியோர் மிடில் ஆர்டரை கவனித்துக் கொண்டனர். எனவே திரிபாதி தொடக்க வீரராக அதிரடியாக விளையாடி நான் மிடில் ஆர்டரில் கொஞ்சம் தாமதமாக வந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். எப்படியிருந்தாலும் அதை காரணமாக சொல்ல முடியாது.

இது ஏலத்தில் முடிவு செய்யப்பட்டது என்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு பேட்டிங்கில் நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. இவற்றை சரி செய்யும்போது முடிவுகள் வித்தியாசமாக வரும். நூர் அகமது, கலீல், ஜடேஜா பாய் நன்றாக பவுலிங் செய்வது நேர்மறையாகும். அந்த பவுலிங் துறையுடன் சேர்ந்து அனைத்தும் வரும்போது நாங்கள் சிறந்த அணியாக இருப்போம்" என்று கூறினார்.

1 More update

Next Story