நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன ? கில் ஓபன்டாக்

இந்தியா-நியூசிலாந்து தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
ராஜ்கோட்,
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வதோதராவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது.50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 112 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டெவான் கான்வே 16 ரன்களிலும், ஹென்ரி நிக்கோல்ஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வில் யங்-டேரில் மிட்செலுடன் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த வில் யங், 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் டேரில் மிட்செல் சதம் விளாசி அசத்தினார். டேரில் மிட்செல் 131 ரன்கள்(11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) குவித்தார். மற்றும் க்ளென் பிளிப்ஸ்(32 ரன்கள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.கடைசியில் நியூசிலாந்து அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா-நியூசிலாந்து தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில், தோல்வி தொடர்பாக பேசிய இந்திய கேப்டன் கில் கூறியதாவது,
மிடில் ஓவர்களில் எங்களால் எந்த விக்கெட்டையும் எடுக்க முடியவில்லை. ஐந்து பீல்டர்கள் உள்ளே இருக்கும்போது, மிடில் ஓவர்களில் நீங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால், நாங்கள் இன்னும் 15-20 ரன்கள் சேர்த்திருந்தாலும் கூட அது மிகவும் கடினமாகிவிடும். மிடில் ஓவர்களில் நீங்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால், ஒரு இலக்கை நிறுத்துவது மிகவும் கடினம்.
முதல் 10 ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். பந்துவீச்சில் எங்களுக்குக் கிடைத்த தொடக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அவர்களை அழுத்தத்தில் ஆழ்த்த முயற்சித்தோம், ஆனால் அவர்கள் மிடில் ஓவர்களில் மிகவும் நன்றாக பேட் செய்தனர் என்று நினைக்கிறேன். நாங்கள் இந்த போட்டியில் நன்றாக பீல்டிங் செய்யவில்லை. என தெரிவித்தார்.






