

சென்னை,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்து. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் கூறியதாவது,
209 ரன்கள் மிகவும் நல்ல ஸ்கோர் என நினைத்தேன். ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுவார்கள் என நினைத்தேன். ஆனால், அவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையவில்லை. அதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
பந்து வீச்சு சிறப்பாக இருந்தபோது திடீரென ஓவருக்கு நடுவே பவுண்டரிகள், சிக்சர்களை கொடுத்துவிடுகிறோம். எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முடியவில்லை. பேட்டிங் சிறப்பாக உள்ளது. ஆனால், பந்து வீச்சை நிச்சயம் மேம்படுத்த வேண்டும். ஆயுஷ் மாத்ரே சிறப்பாக ஆடி வந்ததால் நான் சற்று களத்தில் நின்று ஆடலாம் என நினைத்தேன். ஆனால் நான் தவறான நேரத்தில் அவுட் ஆகிவிட்டேன்’ என்றார்.